எங்கள் பிதா சவுல் மூலமாக இஸ்ரவேலை விடுவிக்கிறார்
11 1அப்பொழுது அம்மோனியனாகிய நாகாஸ் புறப்பட்டுவந்து, யாபேஸ்கீலேயாத்துக்கு எதிராகப் பாளயமிறங்கினான். யாபேஸ் ஊரார் எல்லாரும் நாகாசை நோக்கி, “எங்களோடு உடன்படிக்கை செய், அப்பொழுது உன்னைச் சேவிப்போம்” என்றார்கள்.
2அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ், “உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இஸ்ரவேலர் அனைவர்மேலும் அவமானத்தை வருவிக்கும்படியாகவே, நான் உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்றான்.
3அப்பொழுது யாபேஸின் மூப்பர்கள் அவனை நோக்கி, “இஸ்ரவேலின் எல்லைகள் எங்கும் ஸ்தானாபதிகளை அனுப்ப, எங்களுக்கு ஏழு நாள் தவணைகொடு; எங்களை இரட்சிப்பார் ஒருவரும் இல்லாவிட்டால், உன்னிடத்தில் சரணடைவோம்” என்றார்கள். 4அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவுக்கு வந்து, நடந்தவைகளை ஜனங்களுக்குச் சொன்னபோது, அவர்கள் எல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
5அப்பொழுது சவுல் தன் மாடுகளின் பின்னாக வயலிலிருந்து வந்து, “ஜனங்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?” என்று கேட்டான்; அப்பொழுது யாபேஸ் ஊராரின் செய்தியை அவனுக்கு அறிவித்தார்கள். 6சவுல் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, எங்கள் பிதாவின் ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினார்; அவனுடைய கோபம் கடுமையாய் மூண்டது. 7அவன் ஒரு ஏர்மாடுகளைப் பிடித்து, துண்டுதுண்டாக வெட்டி, ஸ்தானாபதிகள் மூலமாய் அவைகளை இஸ்ரவேலின் எல்லைகள் எங்கும் அனுப்பி, “சவுலுக்கும் சாமுவேலுக்கும் பின்னாகப் புறப்பட்டு வராதவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும்” என்று சொல்லச்செய்தான். அப்பொழுது எங்கள் பிதாவைப் பற்றிய பயங்கரம் ஜனங்கள்மேல் விழுந்தது; அவர்கள் ஏகோபித்து ஒரே மனிதனைப்போலப் புறப்பட்டு வந்தார்கள். 8அவன் அவர்களைப் பேசேக்கிலே எண்ணிப்பார்த்தான்: இஸ்ரவேல் புத்திரர் மூன்று லட்சம்பேரும், யூதா மனிதர் முப்பதாயிரம்பேரும் இருந்தார்கள். 9வந்த ஸ்தானாபதிகளை நோக்கி, “நாளைக்கு வெயில் ஏறும்போது உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும் என்று யாபேஸ்கீலேயாத்து மனிதருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள். ஸ்தானாபதிகள் போய், அதை யாபேஸ் ஊராருக்கு அறிவித்தபோது, அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். 10அப்பொழுது யாபேஸ் ஊரார், “நாளைக்கு உங்களிடத்தில் சரணடைவோம்; உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள்” என்றார்கள். 11மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படைகளாகப் பிரித்தான்; அவர்கள் விடியற்காலஜாமத்தில் பாளயத்திற்குள் புகுந்து, பகல் வெயில் ஏறுமட்டும் அம்மோனியரை வெட்டினார்கள்; தப்பிப்பிழைத்தவர்கள், இருவர் ஒன்றாய் நிற்காதபடிக்குச் சிதறடிக்கப்பட்டார்கள்.
எங்கள் பிதாவுக்கு முன்பாக ராஜ்யம் புதுப்பிக்கப்படுகிறது
12அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி, “சவுல் நம்மை ஆளுவானோ? என்று கேட்டவர்கள் யார்? அந்த மனிதரை ஒப்புக்கொடுங்கள்; அவர்களைக் கொன்றுபோடுவோம்” என்றார்கள்.
13ஆனாலும் சவுல், “இன்று ஒருவனும் கொல்லப்படமாட்டான்; ஏனெனில் இன்று எங்கள் பிதா இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை உண்டாக்கினார்” என்றான்.
14பின்பு சாமுவேல் ஜனங்களை நோக்கி, “வாருங்கள், நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தைப் புதுப்பிப்போம்” என்றான். 15அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அங்கே எங்கள் பிதாவுக்கு முன்பாகச் சவுலை ராஜாவாக்கினார்கள்; அங்கே எங்கள் பிதாவுக்கு முன்பாகச் சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; சவுலும் இஸ்ரவேல் மனிதர் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.