நாபோத்தின் திராட்சத்தோட்டத்தின்மேல் ஆகாப் ஆசைகொள்ளுதல்
21 1இந்தக் காரியங்களுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது; அது சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகில் இருந்தது. 2ஆகாப் நாபோத்தை நோக்கி: “உன் திராட்சத்தோட்டத்தை எனக்குக் கொடு; அது என் வீட்டிற்கு அருகில் இருக்கிறதால், அதை எனக்குக் கீரைத்தோட்டமாக்கிக்கொள்ளுவேன்; அதற்குப் பதிலாக அதைவிட நல்ல திராட்சத்தோட்டத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்கு விருப்பமானால் அதின் விலையை வெள்ளியாய்க் கொடுப்பேன்” என்றான்.
3நாபோத்து ஆகாபை நோக்கி: “என் பிதாக்களின் சுதந்தரத்தை நான் உமக்குக் கொடுப்பது எங்கள் பிதாவுக்கு முன்பாக ஒருபோதும் கூடாது” என்றான். a a v3 எங்கள் பிதாவின் நியாயப்பிரமாணத்தின்படி, குடும்பத்திற்குரிய நிலம் தலைமுறை தலைமுறையாய்க் கைமாறி வரும் நிலையான ஒப்படைப்பாய் இருந்தது; அது என்றைக்கும் விற்றுவிடப்படக் கூடாதிருந்தது; நாபோத்து மறுத்தது பிடிவாதத்தினால் அல்ல, உண்மையுள்ளதனாலேயே.
4“என் முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன்” என்று யெஸ்ரயேலனாகிய நாபோத்து சொன்ன வார்த்தையினால், ஆகாப் சலிப்பும் கோபமும் அடைந்து தன் வீட்டிற்குப் போய், தன் படுக்கையின்மேல் படுத்துக்கொண்டு, தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போஜனம் பண்ணாதிருந்தான். 5அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: “நீர் போஜனம் பண்ணாதபடிக்கு உம்முடைய மனம் இவ்வளவாய் விசனப்படுகிறது ஏன்?” என்று கேட்டாள்.
6அதற்கு அவன்: “நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தை நோக்கி, ‘உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்குக் கொடு, அல்லது உனக்கு விருப்பமானால் அதற்குப் பதிலாய் வேறே தோட்டத்தைக் கொடுப்பேன்’ என்று சொன்னேன்; அவனோ, ‘என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடேன்’ என்றான்” என்று சொன்னான்.
7அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: “நீர் இப்பொழுது இஸ்ரவேலின்மேல் இப்படியா ராஜ்யபாரம் பண்ணுகிறீர்? எழுந்திருந்து போஜனம்பண்ணி, மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன்” என்றாள்.
8அவள் ஆகாபின் பேரில் நிருபங்களை எழுதி, அவனுடைய முத்திரையைப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத்துடன் அவன் பட்டணத்தில் குடியிருந்த மூப்பர்களுக்கும் பிரபுக்களுக்கும் அனுப்பினாள். 9அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: “உபவாசத்தைப் பிரசித்தம்பண்ணி, நாபோத்தை ஜனங்களுக்கு முன்பாகத் தலைமையில் உட்காரவையுங்கள். 10அவனுக்கு எதிராக, ‘நீ தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய்’ என்று அவனுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்ல, பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிரே உட்காரவையுங்கள்; பின்பு அவனை வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கல்லெறியுங்கள்” என்று எழுதினாள்.
11அப்படியே அவன் பட்டணத்து மனிதராகிய, அதிலே குடியிருந்த மூப்பர்களும் பிரபுக்களும், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள். 12அவர்கள் உபவாசத்தைப் பிரசித்தம்பண்ணி, நாபோத்தை ஜனங்களுக்கு முன்பாகத் தலைமையில் உட்காரவைத்தார்கள். 13அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து அவனுக்கு எதிரே உட்கார்ந்து, ஜனங்களுக்கு முன்பாக நாபோத்துக்கு விரோதமாய்: “நாபோத்து தேவனையும் ராஜாவையும் தூஷித்தான்” என்று சாட்சிசொன்னார்கள்; உடனே அவர்கள் அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கல்லெறிந்தார்கள். 14பின்பு அவர்கள்: “நாபோத்து கல்லெறியுண்டு செத்துப்போனான்” என்று யேசபேலுக்குச் செய்திசொல்லியனுப்பினார்கள்.
15நாபோத்து கல்லெறியுண்டு செத்துப்போனான் என்று யேசபேல் கேள்விப்பட்டபோது, அவள் ஆகாபை நோக்கி: “எழுந்திரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்து உமக்கு விலைக்குக் கொடுக்க மறுத்த அவனுடைய திராட்சத்தோட்டத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்; நாபோத்து உயிரோடிருக்கவில்லை, அவன் செத்துப்போனான்” என்றாள்.
16நாபோத்து செத்துப்போனான் என்று ஆகாப் கேள்விப்பட்டபோது, ஆகாப் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவ்விடத்திற்குப் போனான்.
17அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாகி:
18“நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கப் போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவ்விடத்திற்குப் போயிருக்கிறான். 19நீ அவனை நோக்கி: ‘எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால், நீ கொலைசெய்ததுமல்லாமல், அவனுடைய சொத்தையும் கைப்பற்றிக்கொண்டாயோ?’ என்று சொல்; பின்பு அவனை நோக்கி: ‘எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால், நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின அந்த இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும், ஆம், உன்னுடையதையே’ என்று சொல்” என்றார்.
20ஆகாப் எலியாவை நோக்கி: “என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா?” என்றான். அதற்கு அவன்: “எங்கள் பிதாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்கு உன்னை நீயே விற்றுப்போட்டபடியால் உன்னைக் கண்டுபிடித்தேன்.
21இதோ, நான் உன்மேல் தீங்கை வரப்பண்ணி, உன்னை நிர்மூலமாக்கி, ஆகாபுக்குரிய அடிமையும் சுயாதீனனுமாகிய ஒவ்வொரு ஆண்பிள்ளையையும் இஸ்ரவேலில் அறுத்துப்போட்டு, 22உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போலவும் அகியாவின் குமாரனாகிய பாஷாவின் வீட்டைப்போலவும் ஆக்குவேன், நீ எனக்குக் கோபம் மூட்டி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினபடியால்.” 23யேசபேலைக்குறித்தும் எங்கள் பிதா பேசி: “யெஸ்ரயேலின் மதிலருகே யேசபேலை நாய்கள் தின்னும். 24ஆகாபுக்குரியவர்களில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் தின்னும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும்.”
25தன் மனைவியாகிய யேசபேலால் தூண்டிவிடப்பட்டு, எங்கள் பிதாவுக்கு முன்பாகப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்கு தன்னைத்தானே விற்றுப்போட்ட ஆகாபைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 26எங்கள் பிதா இஸ்ரவேலருக்கு முன்பாகத் துரத்திவிட்ட எமோரியர் செய்ததுபோல, அவன் விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பானதைச் செய்தான்.
27ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டை உடுத்திக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே கிடந்து, தாழ்மையாய் நடந்துகொண்டான்.
28அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாகி:
29“ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினபடியால், நான் அவனுடைய நாட்களில் அந்தத் தீங்கை வரப்பண்ணாமல், அவன் குமாரனுடைய நாட்களில் அவன் வீட்டின்மேல் அதை வரப்பண்ணுவேன்” என்றார்.