யெரொபெயாமுக்கு விரோதமான பிதாவானவரின் வார்த்தை
14 1அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதிப்பட்டான். 2அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியை நோக்கி, “நீ எழுந்து, யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேஷம் தரித்துக்கொண்டு, சீலோவுக்குப் போ; நான் இந்த ஜனத்தின்மேல் ராஜாவாயிருப்பேன் என்று எனக்குச் சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான். 3நீ பத்து அப்பங்களையும், சில பணியாரங்களையும், ஒரு கலயம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்தில் போ; இந்தப் பிள்ளைக்கு என்ன சம்பவிக்கும் என்று அவன் உனக்குத் தெரிவிப்பான்” என்றான்.
4யெரொபெயாமின் மனைவி அப்படியே செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டுக்குள் பிரவேசித்தாள். அகியாவால் இனிமேல் பார்க்க முடியவில்லை; முதிர்வயதினால் அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
5ஆனாலும் எங்கள் பிதா அகியாவை நோக்கி, “இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதிப்பட்டிருக்கிற தன் மகனைக்குறித்து உன்னிடத்தில் விசாரிக்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்னின்னபடி சொல்லவேண்டும்; அவள் உள்ளே வரும்போது, வேறொரு ஸ்திரீயைப்போல் மாறுவேஷம் தரித்திருப்பாள்” என்று முன்னதாகச் சொல்லியிருந்தார்.
6அவள் வாசலில் வருகிற காலடிச் சத்தத்தை அகியா கேட்டபோது, அவன், “யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; நீ வேறொருத்தியைப்போல் பாசாங்கு செய்வது ஏன்? கடினமான செய்தியை உனக்குச் சொல்ல நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
7நீ போய் யெரொபெயாமை நோக்கி: ‘இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னை ஜனத்தின் நடுவிலிருந்து உயர்த்தி, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் உன்னைத் தலைவனாக்கினேன். 8நான் ராஜ்யத்தைத் தாவீது வம்சத்தாரிடத்திலிருந்து கிழித்துப்போட்டு, அதை உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்து, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இருக்கவில்லை. 9உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நீ அதிக பொல்லாப்புச் செய்தாய்; நீ போய், எனக்குக் கோபமுண்டாக்கும்படி அந்நிய தேவர்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டாக்கி, என்னை உன் முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டாய். 10ஆகையால் இதோ, நான் யெரொபெயாமின் வீட்டின்மேல் ஆபத்தை வரப்பண்ணி, இஸ்ரவேலில் அடிமையானவனையும் சுயாதீனமுள்ளவனையும், யெரொபெயாமுக்குரிய ஆண்மக்கள் யாவரையும் சங்கரித்து, சாணியை முழுவதும் சுட்டெரிப்பதுபோல, யெரொபெயாமின் வீட்டை அது ஒழிந்துபோகுமட்டும் சுட்டெரித்துப்போடுவேன். 11யெரொபெயாமின் குடும்பத்தாரில் பட்டணத்திலே மரிப்பவனை நாய்கள் தின்னும்; வெளியிலே மரிப்பவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும்; எங்கள் பிதா இதைச் சொன்னார்.’
12இப்போதும் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ; உன் கால்கள் பட்டணத்துக்குள் பிரவேசிக்கும்போது பிள்ளை மரித்துப்போகும். 13இஸ்ரவேலர் யாவரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, அவனை அடக்கம்பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இவன் ஒருவனே பிரேதக்குழியில் சேர்வான்; ஏனென்றால் யெரொபெயாமின் வீட்டாரில் இவனிடத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா நன்மையான ஒன்றைக் கண்டார். 14அல்லாமலும் எங்கள் பிதா இஸ்ரவேலின்மேல் தமக்கென்று ஒரு ராஜாவை எழுப்புவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை சங்கரிப்பான்; இப்பொழுதே அப்படியாகும். 15எங்கள் பிதா இஸ்ரவேலை நீரிலே அசையும் நாணலைப்போல் அசையப்பண்ணி அடித்து, அவர்களுடைய பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, ஐப்பிராத்து நதிக்கு அப்பாலே அவர்களைச் சிதறடிப்பார்; ஏனென்றால் அவர்கள் அவருக்குக் கோபமுண்டாக்கின அசேரா தோப்புகளை உண்டுபண்ணினார்கள். 16யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தம் அவர் இஸ்ரவேலைக் கைவிட்டுவிடுவார்” என்றான்.
17அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு, திர்சாவுக்குப் போனாள்; அவள் வீட்டு வாசற்படியில் கால்வைத்தபோது பிள்ளை மரித்துப்போயிற்று. 18எங்கள் பிதா தம்முடைய தாசனாகிய அகியா என்னும் தீர்க்கதரிசியைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, இஸ்ரவேலர் யாவரும் அவனை அடக்கம்பண்ணி, அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
19யெரொபெயாமின் மற்ற செய்திகளும், அவன் யுத்தம்பண்ணினதும், ராஜ்யபாரம்பண்ணினதும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 20யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்திரண்டு வருஷம்; பின்பு அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
ரெகொபெயாம் யூதாவில் ராஜ்யபாரம்பண்ணுகிறான்
21சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்தான்; எங்கள் பிதா தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே அவன் பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோனியளாகிய அவனுடைய தாயின் பேர் நாமாள். 22யூதா ஜனங்கள் எங்கள் பிதாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் பிதாக்கள் யாவரும் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய் அவருக்கு எரிச்சல் உண்டாக்கினார்கள். 23அவர்களும் உயரமான ஒவ்வொரு மேட்டின்மேலும், பச்சையான ஒவ்வொரு மரத்தின்கீழும், தங்களுக்கு மேடைகளையும், சிலைகளையும், அசேரா தோப்புகளையும் கட்டினார்கள். 24தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; எங்கள் பிதா இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் அந்த ஜனங்கள் செய்தார்கள்.
25ரெகொபெயாம் ராஜாவின் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, 26எங்கள் பிதாவின் ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜ அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான்; சாலொமோன் பண்ணியிருந்த பொற்கேடகங்கள் எல்லாவற்றையும் உட்பட சகலத்தையும் எடுத்துக்கொண்டான். 27அவைகளுக்குப் பதிலாக ரெகொபெயாம் ராஜா வெண்கலக் கேடகங்களைப் பண்ணி, அவைகளை ராஜ அரமனையின் வாசலைக் காக்கிற காவற்சேவகரின் தலைவர்களிடத்தில் ஒப்புவித்தான். 28ராஜா எங்கள் பிதாவின் ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போதெல்லாம், காவற்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், பின்பு அவைகளைக் காவற்சேவக அறையிலே திரும்பக் கொண்டுவந்து வைப்பார்கள்.
29ரெகொபெயாமின் மற்ற செய்திகளும், அவன் செய்த யாவும், யூதா ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா? 30ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் எப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 31ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோனியளாகிய அவனுடைய தாயின் பேர் நாமாள்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.