எங்கள் பிதா தாவீதுக்கு ஒவ்வொரு வெற்றியையும் தருகிறார்
18 1இதற்குப் பின்பு, தாவீது பெலிஸ்தரை முறியடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, பெலிஸ்தரின் கையிலிருந்து காத் பட்டணத்தையும் அதைச் சார்ந்த கிராமங்களையும் பிடித்துக்கொண்டான். 2அவன் மோவாபையும் முறியடித்தான்; மோவாபியர் தாவீதுக்குக் கீழ்ப்பட்டவர்களாகி அவனுக்குக் கப்பம் செலுத்தினார்கள்.
3தாவீது தன் ஆதிக்கத்தை ஐப்பிராத்து நதிவரை பரப்பப் போகையில், சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசரை ஆமாத்துவரை முறியடித்தான். 4தாவீது அவனிடமிருந்து 1,000 இரதங்களையும், 7,000 குதிரைவீரர்களையும், 20,000 காலாட்படை வீரர்களையும் பிடித்துக்கொண்டான். நூறு இரதங்களுக்குப் போதுமானவற்றை வைத்துக்கொண்டு, மற்ற எல்லா இரதக் குதிரைகளின் குதிக்காலின் நரம்புகளையும் அறுத்துப்போட்டான். 5தமஸ்குவின் சீரியர் சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய வந்தபோது, தாவீது சீரியரில் 22,000 பேரை வெட்டிப்போட்டான். 6தாவீது தமஸ்குவின் சீரியாவில் தாணையங்களை வைத்தான்; சீரியர் அவனுக்கு ஊழியக்காரராகி கப்பம் செலுத்தினார்கள். தாவீது போன இடமெங்கும் எங்கள் பிதா அவனுக்கு வெற்றியைத் தந்தார். 7ஆதாதேசரின் அதிகாரிகள் அணிந்திருந்த பொன் கேடயங்களை தாவீது எடுத்து எருசலேமுக்குக் கொண்டுவந்தான். 8ஆதாதேசரின் பட்டணங்களாகிய திபியாத்திலும் கூனிலுமிருந்து தாவீது மிகுதியான வெண்கலத்தை எடுத்துக்கொண்டான்; அதைக்கொண்டு சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும், தூண்களையும், வெண்கலப் பாத்திரங்களையும் செய்தான்.
9தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசரின் சேனையனைத்தையும் முறியடித்ததை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேள்விப்பட்டபோது, 10தோயூவோடு அநேகமுறை யுத்தம்பண்ணியிருந்த ஆதாதேசரை எதிர்த்துப் போராடி முறியடித்ததற்காக, தாவீது ராஜாவை வாழ்த்தி ஆசீர்வதிக்கும்படி அவன் தன் குமாரனாகிய அத்தோராமை அனுப்பினான். அத்தோராம் பொன், வெள்ளி, வெண்கலத்தினாலான எல்லாவித பொருட்களையும் கொண்டுவந்தான். 11தாவீது ராஜா இவைகளை, ஏதோம், மோவாப், அம்மோனியர், பெலிஸ்தர், அமலேக்கு ஆகிய எல்லா ஜாதிகளிடமிருந்தும் தான் எடுத்திருந்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட எங்கள் பிதாவுக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.
12செருயாவின் குமாரனாகிய அபிசாய் உப்புப் பள்ளத்தாக்கில் ஏதோமியரில் 18,000 பேரை வெட்டிப்போட்டான். 13தாவீது ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோமியர் அனைவரும் அவனுக்குக் கீழ்ப்பட்டவர்களாகினார்கள்; தாவீது போன இடமெங்கும் எங்கள் பிதா அவனுக்கு வெற்றியைத் தந்தார்.
தாவீது நியாயத்தோடும் நீதியோடும் ஆளுகை செய்கிறான்
14இப்படியாக தாவீது இஸ்ரவேல் அனைத்தையும் ஆண்டு, தன் ஜனங்கள் அனைவருக்கும் நியாயமும் நீதியும் செலுத்தினான். 15செருயாவின் குமாரனாகிய யோவாப் சேனைக்குத் தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்; 16அகிதூபின் குமாரனாகிய சாதோக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவுசா சம்பிரதியாயிருந்தான்; 17யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் அதிகாரியாயிருந்தான்; தாவீதின் குமாரர் ராஜாவின் பக்கத்தில் பிரதான அதிகாரிகளாயிருந்தார்கள். a a v17 கிரேத்தியரும் பிலேத்தியரும் தாவீதின் சிறந்த ராஜாங்க மெய்க்காவல் படைப்பிரிவுகளாயிருந்தார்கள்; இவர்கள் தொழில்முறையான அந்நிய தேசத்து வீரர்களாயிருந்திருக்கலாம்.