எங்கள் பிதா தாவீதின் வம்சத்தை நிலைநிறுத்துகிறார்
14 1தீரு பட்டணத்தின் ராஜாவாகிய ஈராம், தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டும்படி, கேதுரு மரங்களோடும் கல்தச்சரோடும் தச்சரோடும் தூதர்களை அவனிடத்திற்கு அனுப்பினான். 2எங்கள் பிதா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினார் என்று தாவீது அறிந்துகொண்டான்; ஏனெனில் அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் அவனுடைய ராஜ்யம் உயர்த்தப்பட்டது.
3தாவீது எருசலேமிலே இன்னும் அதிக மனைவிகளை விவாகம்பண்ணி, இன்னும் அதிக குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 4எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 5இப்கார், எலிசூவா, எல்பேலேத், 6நோகா, நேப்பேக், யப்பியா, 7எலிசாமா, பெலியாதா, எலிபெலேத்.
எங்கள் பிதா பெலிஸ்தரை முறியடிக்கிறார்
8தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டான் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடி வந்தார்கள்; தாவீது அதைக் கேட்டு, அவர்களை எதிர்கொள்ளப் புறப்பட்டான். 9பெலிஸ்தர் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவினார்கள்.
10தாவீது எங்கள் பிதாவினிடத்தில், “நான் பெலிஸ்தருக்கு விரோதமாகப் போவேனா? அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான். அதற்கு எங்கள் பிதா அவனை நோக்கி, “போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்” என்றார்.
11அவர்கள் பாகால்பிராசீமுக்குப் போனார்கள்; அங்கே தாவீது அவர்களை முறியடித்தான். அப்பொழுது தாவீது, “நீரானது புரண்டு உடைத்துக்கொண்டு போகிறதுபோல, எங்கள் பிதா என் கையினால் என் சத்துருக்களை முறியடித்தார்” என்றான். ஆகையால் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டார்கள். a a v11 பாகால்பிராசீம் என்பதன் அர்த்தம் “உடைத்துப் புறப்படுகிற கர்த்தர்” என்பதாகும். 12பெலிஸ்தர் தங்கள் தேவர்களை அங்கே விட்டுவிட்டார்கள்; தாவீது கட்டளையிட, அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
13பெலிஸ்தர் மறுபடியும் அந்தப் பள்ளத்தாக்கிலே பரவினார்கள்.
14தாவீது மறுபடியும் எங்கள் பிதாவினிடத்தில் விசாரித்தான்; அப்பொழுது எங்கள் பிதா, “அவர்கள் பின்னாலே போகாதே; அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து அவர்கள்மேல் வா. 15முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளில் செல்லும் இரைச்சலைக் கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; ஏனெனில் பெலிஸ்தரின் படையை முறியடிக்கும்படி உன் பிதா உனக்கு முன்னே புறப்பட்டிருக்கிறார்.”
16எங்கள் பிதா தனக்குக் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான்; அவர்கள் கிபியோன் தொடங்கிக் கேசேர்மட்டும் பெலிஸ்தரின் இராணுவத்தை முறியடித்தார்கள். 17தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பரவிற்று; எங்கள் பிதா சகல ஜாதிகளுக்கும் அவனைப்பற்றிய பயத்தை உண்டாக்கினார்.